சென்னை மாநகராட்சி சார்பில் மாணவிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

By ச.கார்த்திகேயன்

சென்னை: மாநகராட்சி சார்பில் சூளைமேட்டில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சி பகுதியில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கவும், பயன்படுத்தவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் சூளைமேட்டில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று, வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் மற்றும் அபாயகரமான வீட்டுக் குப்பைகள் என்று வகைபிரித்து அளிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார். தொடர்ந்து, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் விளக்கினார். பின்னர், மாநகராட்சியின் விழிப்புணர்வு வாகனம் மூலம் பொது சுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக காணொலி காட்சிகளும் காண்பிக்கப்பட்டன.

பின்னர், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் குப்பையை வகை பிரித்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாநகராட்சி சார்பில் விநியோகித்தனர். தொடர்ந்து, அனைவரும் தூய்மை தொடர்பான உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 112-வது வார்டு கவுன்சிலர் எலிசபெத் அகஸ்டின், எக்ஸ்னோரா கோவிந்தராஜ், பள்ளி உதவி தலைமையாசிரியை கே.எல்.சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE