பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் கம்யூனிஸ்ட்கள் மறியல்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த மறியல் போராட்டங்களில் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இன்று காலை கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து, பூங்கா கிழக்குச் சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பிரதான சாலையில் வந்த அவர்களை தனியார் மண்டபம் முன்பு டிஎஸ்பி-யான வெங்கடேஷ் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட நகரச் செயலாளர் அ.சரோஜா, ஒன்றியச் செயலாளர் பி.ராஜேஸ்வரி, மாவட்டக் குழு உறுப்பினர் பி. பரமராஜ் உள்ளிட்ட 183 பெண்கள் உட்பட 256 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், பயணியர் விடுதி முன்பிருந்து மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் கே.சீனிவாசன் தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.புவிராஜ், ஜி.ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் எம்.தெய்வேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டவாறு ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் பிரதான சாலை வழியாக பாரத ஸ்டேட் வங்கி முன்பு வந்து சேர்ந்தனர். அங்கு அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்து மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில் மறியலில் ஈடுபட்ட சுமார் 300 பேரை போலீஸார் கைது செய்தனர். இரண்டு கட்சிகளின் மறியல் போராட்டங்களால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எட்டயபுரம் தாலுகா செயலாளர் சோலையப்பன் தலைமையில் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE