சென்னை - காரைக்குடி கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்: நாகை எம்.பி வலியுறுத்தல்

By மு.வேல்சங்கர்

டெல்லி: சென்னை - காரைக்குடி கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நாகை எம்.பி-யான வை.செல்வராஜ் வலியுறுத்திப் பேசினார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் நாகப்பட்டினம் எம்பி வை.செல்வராஜ் நேற்று பேசியதாவது, "நாட்டில் வெகுஜன வாகனம் ரயில்தான். ரயில் பயணத்தை அனைவரும் விரும்புவதற்கு முக்கியக்காரணம் குறைந்த கட்டணம், இயற்கை உபாதை கழிக்கும் வசதி ஆகியவை ஆகும். எனவே, இதை மேம்படுத்த வேண்டும். சமீபகாலமாக, நாட்டில் பல இடங்களில் ரயில்கள் தடம்புரளுவதை பார்க்கும்போது, இந்திய ரயில்வே தடம் மாறிச் செல்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. விபத்துக்குக் காரணம், பணியாளர் குறைபாடா அல்லது பயிற்சியின்மை குறைபாடா என்பதை விளக்க வேண்டும்.

விண்வெளியில் சுற்றும் ராக்கெட்டை பூமியில் இருந்து பழுதுநீக்கும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழ்நிலையில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வருவதை ஏன் முன்கூட்டியே அறிய முடியவில்லை. எனவே, கவாச் போன்ற கருவிகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். எந்த வடிவத்திலும் ரயில்வே துறையை தனியார் மயமாக்கக்கூடாது. இதை அரசு உறுதிப்படுத்தவேண்டும். ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனத்தில் ஆட்கள் குறைப்பு செய்வதை நிறுத்தவேண்டும். ரயில்வே காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் இரட்டைப் பாதையை மின்மயமாக்கலுடன் நிறைவேற்ற வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை மீண்டும் தரவேண்டும்.

ரயிலில் பத்திரிகையாளர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கரோனா காலத்தில் இந்தச் சலுகை நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் வழங்க வேண்டும். விழாக் காலங்களில், வாரவிடுமுறை நாட்களில் காத்திருப்போர் பட்டியல் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது, கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். காலாவதியான தண்டவாளங்களை எடுத்துவிட்டு புதிய தண்டவாளங்கள் அமைக்க வேண்டும்.

திருப்பூர் தொழில்துறையில் முக்கிய மையம் ஆகும். இங்கு எல்லா ரயில்களும் நின்று செல்ல வேண்டும். திருவாரூரில் அனைத்து ரயில்களுக்குமான முதன்மை பணிமனை அமைக்க வேண்டும். மதுரை-புனலூர்- மதுரை ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்பட வேண்டும். காரைக்கால்-திருவாரூர் - தஞ்சாவூர் மற்றும் திருவாரூர்- மயிலாடுதுறை வழித்தடத்தை இரட்டை வழித்தடமாக மாற்ற வேண்டும். மன்னார்குடி - திருப்பதி ரயிலை தினசரி இயக்க வேண்டும். மன்னார்குடி - மயிலாடுதுறை ரயிலை திருவாரூரை இணைக்கும் வகையில், காலையில் காரைக்குடி - திருவாரூர் வரை பயணிகள் ரயில் இயக்க வேண்டும். சென்னை - காரைக்குடி கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE