ஆடிப்பெருக்கு நாள் அன்றும், ஞாயிற்றுக்கிழமையும் மேட்டூர் அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காவிரிக் கரையோர பகுதிகளுக்கு வருவதை, பாதுகாப்பு கருதி மக்கள் தவிர்க்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவுறுத்தியுள்ளார்.
நாளை மறுதினம் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, “மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அணைக்கு வந்து கொண்டிருக்கும் 1.7 லட்சம் கனஅடி நீரும், உபரி நீராக மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதையொட்டி வருவாய்த்துறை நீர்வளத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒலிபெருக்கி, தொலைக்காட்சி, சமூக ஊடகம். செய்தித்தாள்கள் ஆகியவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு கருதி, ஆடிப்பெருக்கு விழா நாளில், காவிரி ஆற்றில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் இறங்கி குளித்தல், நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல், புகைப்படங்கள் எடுத்தல், காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.
நீர்நிலை அருகில் குழந்தைகள் செல்லாமல் இருப்பதை பெற்றோர்கள் கவனமாக கண்காணித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மேட்டூர் அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காவிரி கரையோர பகுதிகளுக்கு வருவதை பாதுகாப்பு நலன் கருதி தவிர்த்திட வேண்டும்” என்று தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.