திருப்பூர்: ஆகஸ்ட் மாதத்தில் முதல் 15 நாட்களுக்கு நூல் விலையில் மாற்றம் இருக்காது என நூற்பாலைகள் இன்று அறிவித்துள்ளன.
திருப்பூரின் அடையாளமாக பின்னலாடைத் தொழில் உள்ளது. இங்கு ஆடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்தே, ஆடைகளின் விலை உள்ளூர் துவங்கி சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவித்து, அவர்கள் தரும் ஆர்டர்களின் அடிப்படையில் ஆடைகளைத் தயாரித்து அனுப்பி வைப்பார்கள்.
நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால், நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை கடந்த 3 ஆண்டு காலமாக தொடர்ந்து சந்திக்கின்றனர். முன்பு மாதம் ஒருமுறை நூல் விலை அறிவிப்பு இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 15 நாட்களுக்கு ஒருமுறை என நூற்பாலைகள் அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.
ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தைத் தாண்டி உற்பத்திச் செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்திக் கேட்டால் ஆர்டர்கள் ரத்தாகும். இதன் மூலம் வர்த்தக வாய்ப்புகளை இழக்கும் சூழல் உண்டாகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் திருப்பூர் பின்னலாடைத் தொழில் நடந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பூருக்கு தற்போது ஆர்டர்கள் வரத்துவங்கி உள்ளன. இதனால் உற்பத்தியை தீவிரப்படுத்த தொழில்துறையினர் முயற்சி செய்துவருகிறார்கள். இதற்கிடையே ஆகஸ்ட் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்தன. நூல் விலையில் மாற்றம் இல்லாமல் கடந்த மாத விலையே தொடரும் என தெரிவித்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் முதல் 15 நாட்களுக்கு நூல் விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது என நூற்பாலைகள் அறிவித்துள்ளன.
தற்போது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202க்கும், 20-வது நம்பர் ரூ.260-க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர், ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.