உடுமலை: காலநிலை மாற்றத்தால் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடு வழங்க கோரி மாநிலம் தழுவிய அளவில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றதாக சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் உடுமலையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், உடுமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சத்தியமங்கலம், தாளவாடி, கோபி, தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு உட்பட்டு சுமார் 25,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டு கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று மாத காலமாக காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக பட்டு உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் இன்று (மே 20) மாநிலம் தழுவிய அளவில் இழப்பீடு கேட்டு பட்டு வளர்ச்சி துறை அலுவலகங்களில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
உடுமலை அடுத்துள்ள மைவாடி கிராமத்தில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
» சாலை அமைக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் பாஜக ஆர்ப்பாட்டம்
» “உயிர் பலி ஏற்பட்ட பிறகு குற்றாலத்தில் அரசு எச்சரிக்கை” - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பட்டுக் கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்க மாநில தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பட்டுக்கூடு உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். வீரியம் இல்லாத புழுக்கள் தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கால நிலை மாற்றத்தால் கடந்த 3 மாதங்களாக கடும் வெய்யில் வாட்டியது.
இதனால் பல பகுதிகளில் 30 சதவீதம் பட்டுக்கூடு உற்பத்தி பாதித்துள்ளது. சில இடங்களில் முழுவதுமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த இழப்பீட்டை வழங்க வேண்டும். கடந்த 2021-2022-ம் ஆண்டு விவசாயின் சார்பாக காப்பீட்டுக்கான பிரீமியம் ரூ.179 தொகையை அரசே செலுத்தியது. இதன் மூலம் புழு வளர்ப்பு தோல்வியடைந்தால் ரூ.10,000, புழு வளர்ப்புமனை சேதமடைந்தால் ரூ. 2 லட்சம், விவசாயி விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம், மருத்துவ செலவுக்கு ரூ.1 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என அறிவித்தது.
2023-2024-ம் ஆண்டில் மேற்கண்ட அதே பலன்களுடன் கூடிய காப்பீட்டு திட்டத்துக்கு பிரீமிய தொகை மட்டும் 4 மடங்கு உயர்த்தி ரூ.799 செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பிரீயம் அதிகரிக்கப்பட்டால், காப்பீட்டு தொகையும் அதிகரித்து வழங்க வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை. காப்பீட்டு திட்டத்தில் விவசாயி தனது பங்களிப்பு தொகையாக மேலும் ரூ.290 செலுத்த வேண்டும்.
காப்பீட்டு திட்டத்தில் நிலவும் குளறுபடிகளை போக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு தமிழகம் முழுவதும் உள்ள 14 பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் விவசாயிகளால் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சங்கத்தின் மாநில குழு கூடி அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.
- எம்.நாகராஜன்