ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம், ஓய்வு குறித்து ஆராய வேண்டும்: ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ரயில்வே வாரியம் உத்தரவு

By KU BUREAU

சென்னை: ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம், ஓய்வு குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ரயில்கள் இயக்கத்தில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்கள்) முக்கியப் பங்குவகிக்கின்றனர். ரயில்வேயில் நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணியை முடித்த பிறகு வழங்கப்படும் 16 மணி நேர ஓய்வு மற்றும் வார ஓய்வு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

மேலும், ரயில் ஓட்டுநர்கள் பிரிவில்காலிப்பணியிடங்களை நிரப்பாததால், தொடர் இரவுப் பணி, கூடுதல் பணிச்சுமை ஆகியவற்றால் அவர்களின் உடல்,மனநலம் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே, அவர்களுக்கு பணிக்குப் பிறகு, 16 மணி நேர ஓய்வு, வார ஓய்வு முறையாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக ரயில் விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் நடந்துள்ள ரயில் விபத்துகளுக்கான காரணங்களில் மனிதத் தவறு முக்கியமானதாக உள்ளது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம், ஓய்வு குறித்து ஆராய்ந்து,ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

குழு அமைக்க முடிவு: ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம், ஓய்வு குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவில் ரயில்வே வாரியத்தின் ஓர் அதிகாரி, கூடுதல் உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர் இடம்பெறுவர். இந்தகுழு அடுத்த ஒரு மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யும்.

ரயில் ஓட்டுநர்கள் வெளி நிலையங்களில் ஓய்வு,தலைமையகத்தில் ஓய்வு, காலமுறைஓய்வு, பணி நேரம் ஆகியவை குறித்துஆராயப்படும். இவ்வாறு ரயில்வேவாரியத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் கழகத்தின் மத்திய அமைப்பு செயலர் பாலசந்திரன் கூறும்போது, ``ரயில் ஓட்டுநர்களின் வார ஓய்வு, இரவுப் பணிகள் தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் உறுதியளித்த நிலையில், ரயில்வே வாரியம் இந்தகுழுவை அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த குழுவின் வாயிலாக, ரயில்ஓட்டுநர்களின் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE