மேகேதாட்டு அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

By KU BUREAU

சென்னை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒட்டு மொத்த தமிழகமக்களையும், விவசாயிகளையும் மதிக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசு நடந்து கொண்டிருக்கிறது என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: மேகேதாட்டு அணை தொடர்பாக, தமிழகஅரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று, பிரதமர் மோடி வலியுறுத்தியும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் துணை முதல்வர் சிவக்குமார், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

சந்தர்ப்பவாத இண்டியா கூட்டணியின் நலனுக்காக, திமுக அரசு, தமிழக விவசாயிகளின் நலன்களைத் தாரைவார்த்ததன் விளைவு,இன்று, மேகேதாட்டு அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தக் கூட தமிழக அரசை மதிக்காமல் செயல்படுகிறது கர்நாடக காங்கிரஸ் கட்சி.

கர்நாடக காங்கிரஸ் அரசு அவமானப்படுத்தியிருப்பது திமுக என்ற கட்சியை அல்ல.காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்படுவது திமுகவுக்குப் புதிதும் அல்ல. ஆனால், ஒட்டு மொத்த தமிழக மக்களையும், விவசாயிகளையும் மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் கட்சியின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

திமுக, உடனடியாக, தங்கள் கூட்டணியான காங்கிரஸ் கட்சித் தலைமையிடம், மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்துவதோடு, தமிழகத்தின் உரிமைகளையும், தமிழக விவசாயிகளின் நலனையும் தங்கள் சந்தர்ப்பவாத இண்டியா கூட்டணிக்காக வழக்கம்போல காவு கொடுக்காமல் நடந்து கொள்ளும்படியும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE