வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 பேர் உயிரிழப்பு

By ஆர்.டி.சிவசங்கர்

கூடலூர்/குன்னூர்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தொடர் கனமழையால் கேரளமாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரியில் ஏராளமானோர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ், கல்யாணகுமார் ஆகியோர் உயிரிழந்த நிலையில், இருவரது குடும்பத்தினருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த ஷிஹாப் என்பவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. அவர்சூரல்மலை பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மத ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். அவர்இருந்த பள்ளிவாசல் முழுவதுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ஷிஹாப் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

குடும்பமே உயிரிழப்பு: குன்னூர் கரன்சி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், சந்திரா தம்பதியின் மகள் கவுசல்யா. இவருக்கும், சூரல்மலையை சேர்ந்த பிஜிஸ் என்பவருக்கும் திருமணமாகி, அங்கு வசித்து வந்துள்ளார். இந்ததம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை இருந்தது. இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி கவுசல்யா, பிஜிஸ் மற்றும் குழந்தை என மூவரும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 4-ஆகஅதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கதறிய தந்தை... உயிரிழந்த கவுசல்யாவின் தந்தை ரவிச்சந்திரன், குன்னூரில் கதறியழுதபடி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் மகள் கவுசல்யாவுக்கும்(26), சூரல்மலையைச் சேர்ந்த பிஜிஸ் குட்டன்(36) என்பவருக்கும் திருமணமானது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பிஜிஸ், தனது பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்.

இந்நிலையில், நிலச்சரிவில் மகள், மருமகன், பேத்தி என 3 பேருமே உயிரிழந்து விட்டனர். இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவர்கள் 3 பேரின் உடலைகுன்னூருக்கு கொண்டு வர இயலாததால், அங்கேயே தகனம் செய்துவிட்டோம். பிஜிஸ் குட்டனின் பெற்றோர் உடல்களை தேடி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.3 லட்சம் நிவாரணம்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தலாரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் கா.ராமச்சந்திரன், கூடலூர் அருகேயுள்ள புளியம்பாறையில் உள்ள காளிதாஸ் குடும்பத்தை நேற்று சந்தித்து, தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார்.

அதேபோல, பந்தலூர் வட்டம் சேரங்கோடு கிராமம் கொல்லி அட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தகல்யாணகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, ரூ.3 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் வழங்கினார்.

திமுகவினர் அஞ்சலி: நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஒருவரான காளிதாஸ் நெல்லியாளம் நகரம், 14-வது வார்டுதிமுக துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர். எனவே, நீலகிரி மாவட்ட திமுக செயலாளர்பா.மு.முபாரக் மற்றும் கட்சியினர்அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE