காவிரி டெல்டாவுக்காக கல்லணையிலிருந்து 3,400 கனஅடி நீர் திறப்பு: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

By KU BUREAU

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையில்இருந்து நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், அங்குள்ள அணைகள் நிரம்பியதைத் தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காகவும், ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடவும் கடந்த 28-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர், திருச்சி முக்கொம்பு மேலணை வழியாக நேற்று அதிகாலை கல்லணைக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து, கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கல்லணையில் உள்ள காவிரி அம்மன் சிலை, அகத்தியர் சிலை, கரிகால் சோழன் சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, ஆஞ்சநேயர் சிலை,கருப்பண்ண சுவாமி சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது.

பின்னர், கல்லணையில் இருந்து பாசனத்துக்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ்பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், டிஆர்பி.ராஜா உள்ளிட்டோர் தண்ணீரைத் திறந்துவைத்து, நவதானியங்கள், மலர்களைத் தூவி, விவசாயம் செழிக்க வேண்டினர். கல்லணையிலிருந்து நேற்று காலை காவிரியில் 1,500 கனஅடியும், வெண்ணாற்றில் 1,000 கனஅடியும், கல்லணைக் கால்வாயில் 500 கனஅடியும், கொள்ளிடத்தில் 400 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறும்போது, "டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான அளவுபயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அவற்றில் தண்ணீர் தேக்கிவைக்குமாறு அறிவுரைகள் வழங்கப்படும்" என்றார்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ-க்கள்துரை.சந்திரசேகரன், கா.அண்ணாதுரை, நா.அசோக்குமார், டிகேஜி.நீலமேகம், கதிரவன், நாகைமாலி, மாவட்ட ஆட்சியர்கள் பா.பிரியங்கா பங்கஜம், மா.பிரதீப்குமார், ஏ.பி.மகாபாரதி, தி.சாரு, மு.அருணா மற்றும் நீர்வள ஆதாரத் துறையினர், விவசாயிகள் கலந்து கொண்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE