மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்: 56 ஏரிகளில் உபரிநீர் நிரப்பும் பணி தொடக்கம்

By KU BUREAU

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று முன்தினம் மாலை எட்டியது.

இதையடுத்து, அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள், நீர் மின்நிலையங்கள் மற்றும் கால்வாய் வழியாக நேற்று காலை விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று இரவு 1,70,500கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அணைக்கு நேற்று இரவு நீர்வரத்து விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாகவும், நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது.

இதனிடையே, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு, மேட்டூர் அணை உதவி செயற் பொறியாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், "மேட்டூர் அணை நீர்மட்டம்முழு கொள்ளளவை எட்டியதால்,உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் 1.75 லட்சம் கனஅடி வரைதண்ணீர் திறக்கப்படலாம் என்பதால், காவிரிக் கரையோரம் மற்றும்தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும்மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும். அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேட்டூர் உபரிநீரை 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணியை, திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேற்று தொடங்கிவைத்தார். தொடர்ந்து, எம்.காளிப்பட்டி ஏரிக்கு நீர் வருவதை ஆட்சியர் பிருந்தா தேவி, எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், சதாசிவம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பார்வையிட்டனர்.

ஒகேனக்கல்லில்... தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 98 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 1.40 லட்சம் கனஅடியாகவும் அதிகரித்தது.

இதனால், பிரதான அருவி, சினிஃபால்ஸ், ஐந்தருவி ஆகியவை நீரில் மூழ்கின. தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் முதல் நாகமரை வரையிலான காவிரிக் கரையோரப் பகுதிகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE