அமித் ஷாவுக்கு பினராயி பதில் முதல் வயநாடு பேரழிவுக்கான ‘காரணங்கள்’ வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

“கேரளாவை மத்திய அரசு முன்பே எச்சரித்தது” - அமித் ஷா: வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “வானிலை குறித்து 7 நாட்களுக்கு முன்பே கணிக்கும் எச்சரிக்கை அமைப்பு மத்திய அரசு சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் அதிநவீன முன்னெச்சரிக்கை அமைப்பு இந்தியாவிடம் உள்ளது. ஏழு நாட்களுக்கு முன்னரே வானிலையை கணிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற உலகின் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கையை மத்திய அரசு கடந்த 23-ம் தேதியே வழங்கியது.

மீண்டும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது. ஜூலை 26-ம் தேதி அனுப்பப்பட்ட செய்தியில், 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்றும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், சேறும் சகதியுமாக மழைநீர் வரலாம் என்றும், அதில் புதைந்து மக்கள் உயிரிழக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னரே எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது” என்று அமித் ஷா தெரிவித்தார்..

அமித் ஷாவுக்கு பினராயி விஜயன் பதில்: வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அமித் ஷா பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பினராயி விஜயன், “இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்தது. எனினும், வயத்தில் 500 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக அதிகம். செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே வயநாடு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குற்றம்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அமித் ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக் கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்பு அதிகரிப்பு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களில் இதுவரை 270 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணியில் ராணுவம், போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக, புதன்கிழமை காலை முதல் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலா பகுதிகளில் இருந்து 270 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 200 பேர் மாயமாகி உள்ளதாக தெரிகிறது. இதனை அரசு தரப்பு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 89 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 32 பேரின் உடல்கள் அவர்களது உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இதுவரை 143 பேரின் உடல்களுக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலர் மண்ணுக்குள் புதைந்து இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு மேப்பாடி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அந்தப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு கூடுதல் உதவி: ஸ்டாலின் உறுதி - சென்னை கொளத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார். அப்போது, “வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். ‘சேதாரத்தை இன்னும் கணக்கெடுக்க முடியவில்லை. வயநாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார். கேரளாவுக்கு தேவையான எந்த உதவிகளும் தமிழ்நாடு அரசின் சார்பாக செய்கிறோம் என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன். இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மருத்துவக் குழுவும், நிவாரண நிதியாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. தேவைப்பட்டால் இன்னும் உதவிகள் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம்” என்றார்.

அதிமுக, தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிவாரண நிதி: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக, அதிமுக சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும், என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதேபோல், கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

பேரவைக்குள் குட்கா விவகாரம்: ஐகோர்ட் உத்தரவு: முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீஸுக்கு, உரிமைக் குழுவிடம் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவையில் பேசிய பாஜக எம்பி அனுராக் தாக்குர், ராகுல் காந்தி உண்மையான இந்து அல்ல எனக் கூறி, அவரது சாதி குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக அனுராக் தாக்குர் பேசிய பேச்சின் முழு வீடியோவின் லிங்கை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து, அனுராக் தாக்கூரின் பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீசை காங்கிரஸ் கொடுத்துள்ளது.

அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்: ஒலிம்பிக் குத்துச்சண்டையில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன். 75 கிலோ எடைப் பிரிவில் நார்வேயின் சுனிவா ஹோஃப்ஸ்டாட்டை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அவர் வீழ்த்தினார்.

ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லக்‌ஷயா சென் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். குரூப் சுற்று ஆட்டத்தில் உலக பாட்மிண்டன் தரவரிசையில் மூன்றாம் நிலை வீரரான இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை அவர் வீழ்த்தி அசத்தி இருந்தார்.

அதேபோல், நடப்பு ஒலிம்பிக் தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு, அதாவது காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ரியோ மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் ஹமாஸ் தலைவர் படுகொலை: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது. ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இஸ்மாயில் ஹனியே கடந்த 1987 ஆம் ஆண்டு ஹமாஸ் படையில் இணைந்தார். இஸ்ரேலுக்கு எதிரான முதல் புரட்சியில் அவர் பங்கேற்றார். 1993 வரை நடந்த அந்த மோதலில் அவர் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வயநாடு பேரழிவுக்கு காரணங்கள் என்ன? - காலநிலை விஞ்ஞானியும் புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலருமான ராஜீவன் கூறும்போது, “கேரளாவில் தொடர் கனமழை காரணமாக மணல் மிருதுவாகி அரிப்பு ஏற்படுவது எளிதாகிவிட்டது. மண்ணில் ஈரப்பதம் உச்சபட்சத்தை எட்டும்போது தெவிட்டு மண்ணாகிக் கரைந்து உருண்டோடிவிடும். இப்படியிருக்க, பாரம்பரிய காட்டு மரங்கள் அடியாழம் வரை வேர் பரப்பி மணலை இறுகப் பற்றிக்கொள்ளக்கூடியவை. அதுவே ரப்பர் மாதிரியான தோட்ட மரங்களின் வேர்களால் அவ்வளவாக மணலை இறுக பற்றிக்கொள்ள முடியாது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வணிக நோக்கத்துக்காகத் தோட்டப்பயிர்கள் பெருமளவில் விளைவிக்கப்படுவதால் தற்போதைய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்” என்று கூறினார்.

இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கால் கூறும்போது, “கேரள மாநிலத்தில் உள்ள சரிபாதி குன்றுகள் மற்றும் மலைகளினால் ஆனது. இத்தகைய பகுதிகளில் உள்ள மலைச்சரிவு 20 டிகிரி வரை செங்குத்தாக இருப்பதால் கனமழை பெய்தால் நிலச்சரிவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இத்தகைய சூழலில், ‘சூழலியல் உணர்திறன் மிகுந்த மண்டலங்கள்’ அடையாளம் காணப்பட்டு அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு அப்பகுதி வாழ் மக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் முன்னறிவிப்பை வழங்கினால் பல உயிர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் நிச்சயம் பாதுகாக்க முடியும். இதுதவிர பருவநிலை மாற்றமும் மனிதர்களின் இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகளும் இத்தகைய அதிபயங்கரமான நிலச்சரிவு ஏற்பட முக்கிய காரணிகள் என்பதை மறுப்பதற்கில்லை” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE