மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை எரிப்பு: ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும், விவசாய திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்தும் தஞ்சையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலை எரித்து இன்று போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டில் பயனுள்ள எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விவசாயிகள் விரோத நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் அ.பன்னீர்செல்வம், சோ.பாஸ்கர், பி.செந்தில்குமார், விஜயகுமார், என்.சுரேஷ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர், தொழிற்சங்க நிர்வாகிகள் வெ.சேவையா, கே.அன்பு, துரை.மதிவாணன், அழகு.தியாகராஜன், என்.குருசாமி உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை ஒட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நிதிநிலை அறிக்கையின் நகலை விவசாயிகள் எரித்த போது, அதனை அவர்களிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்து நெருப்பை அணைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE