அசாம் மாநில திரைப்பட விருது வென்றவர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் பவுன்ஸ்: அரசு மீது விமர்சனம்

By காமதேனு

அசாம் மாநில திரைப்பட விருதுகளை வென்ற பலருக்கு வழங்கப்பட்ட காசோலைகள் பவுன்ஸ் ஆகியுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவத்தை பலரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

அசாம் மாநில திரைப்பட விருதுகளை வென்ற 8 வெற்றியாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட காசோலைகள், நேற்று வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டது. 2018ம் ஆண்டுக்கான சினிமாவில் சிறந்த எழுத்தாளருக்கான விருதை வென்ற அபராஜிதா பூஜாரி இது குறித்து பேசுகையில்,"வெள்ளிக்கிழமை காசோலையை டெபாசிட் செய்தேன், அது பவுன்ஸ் ஆனதாக வங்கியில் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக நான் அமைப்பாளர்களை அழைத்தேன், அவர்கள் போதுமான இருப்பு இல்லை என்று கூறினார்" எனத் தெரிவித்தார்.

மேலும், விருதுகளை வென்ற அம்ரித் ப்ரீதம் (ஒலி வடிவமைப்பு), தேபஜித் சாங்மாய் (ஒலிக்கலவை), பிரஞ்சல் தேகா (இயக்கம்), தேபாஜித் கயான் (ஒலி வடிவமைப்பு மற்றும் கலவை) மற்றும் பெஞ்சமின் டைமரி (நடிப்பு) போன்ற முக்கியத் திரையுலகப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளும் பவுன்ஸ் ஆனதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவை அசாம் மாநில திரைப்பட நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் ஏற்பாடு செய்தது. காசோலைகளில் கலாச்சார அலுவல்கள் பணிப்பாளர் கையெழுத்திட்டுள்ளார். மாநில கலாச்சார விவகார அமைச்சர் பிமல் போரா இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டார். விருத்தாளர்கள் மீண்டும் சனிக்கிழமை தங்கள் காசோலைகளை டெபாசிட் செய்யலாம் என நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE