நாமக்கல்: ராசிபுரத்தில் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தி, புதிய பேருந்து நிலையம் அருகே அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராசிபுரம் நகரின் மையப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தை ராசிபுரம் அருகே நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய அணைப்பாளையத்திற்கு இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் நகர மக்கள் மற்றும் வணிகர்கள் சங்கங்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், ராசிபுரம் நகர பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புதிய பேருந்து நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனு அளித்தல், கடையடைப்பு போராட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ராசிபுரம் நகரப் பேருந்து நிலையம் மீட்புக் கூட்டமைப்பினர் அறிவிப்பு செய்தனர். இந்தப் போராட்டம் இம்மாதம் 23ம் தேதி நடக்க இருந்தது. ஆனால், காவல்துறையினர் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது.
» இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை
» வயநாடு நிலச்சரிவால் கர்நாடகா- கேரளா சாலை துண்டிப்பு: பேருந்துகள் நிறுத்தம்
இந்த வழக்கில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் புதிய பேருந்து நிலையம் அருகே பந்தல் அமைத்து ராசிபுரம் நகரப் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பினர், “ராசிபுரத்தில் தற்போது உள்ள புதிய பேருந்து நிலையம், நகரத்திலிருந்து 7 கி.மீ., தொலைவுக்கு அப்பால் அணைப்பாளையம் என்ற இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இதனால் நகர மக்கள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவர்.
எனவே, இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி முதற்கட்டமாக ராசிபுரம் நகரப் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் 2-ம் கட்டமாக தற்போதைய புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டம் காலை 8 மணிக்கு துவங்கிய நிலையில், மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், பேருந்து நிலைய இடமாற்ற திட்டத்தை கைவிடும் வரை போராட்டங்கள் தொடரும்” என்றனர்.