சென்னை: சட்ட விரோத பண பரிவர்த்தனை விவகாரம் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையைச் சேர்ந்த தொழில்அதிபர் பாலாஜி கபா. இவரிடம்சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் புதிய சுற்றுச் சூழல் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், இதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறிரூ.16 கோடி வரை பணம் முதலீடுசெய்ய வைத்து மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரவீந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்நிலையில், இவர் சட்ட விரோதபணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்அடிப்படையில் அமலாக்கத் துறைஅதிகாரிகள் நேற்று சென்னை, அசோக் நகரில் உள்ள அவரதுவீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல், சென்னை கிழக்குகடற்கரைச் சாலையில் உள்ள மற்றொரு சினிமா தயாரிப்பாளர் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதுமட்டும் அல்லாமல் சென்னையில் பொதுத் துறை வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வரும் சென்னை, வடபழனியில் வசிக்கும் ஒருவரது வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த இடங்கள்உட்பட சென்னையில் 5 இடங்களில்நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை சோதனைக்கு உள்ளான ரவீந்தர் சந்திரசேகர், லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்றசினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். மேலும், பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட விவகாரம் சமூக வலைதளங்களில் முன்பு வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.