காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் மழைநீரை அகற்றக் கோரி அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்லவர்மேடு, பகுதியில் உள்ளது அருந்ததி பாளையம். இந்தப்பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி வெளியேறாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து பலருடைய வீட்டு வாசல் முன்பு சேறும், சகதியுமாக மாறியுள்ளது.
இந்தப் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பல்லவர் மேட்டில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.