சென்னை: சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கான அபராதத் தொகை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் கவனிப்பாரின்றி சுற்றித் திரியும் கால்நடைகளால் அடுத்தடுத்து விபத்துக்கள் நேர்ந்து வருகிறது. மேலும் சில கால்நடைகள் இருசக்கர வாகன ஓட்டிகளை தாக்குவதில் அவர்கள் படுகாயம் அடையும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக மாநகராட்சி சார்பில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், இன்று மாநகர மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் முகேஷ் குமார், ஆணையாளர் குமரகுருபரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அப்போது மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்முறையாக மாடு பிடிபட்டால், 10 ஆயிரம் ரூபாயும், 2வது முறையாக பிடிபட்டால் 15 ஆயிரம் ரூபாயும் அபராதத்தொகை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவுக்காக மாடுகள் பிடிபட்ட 3வது நாளில் இருந்து கூடுதலாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
» 'என் இதயம் முழுவதும் நீ தான் இருக்கிறாய்' - வைரலாகும் ஹர்திக் பாண்டியா வீடியோ
» மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு: உணவுக்காக மரத்தை முறித்த போது சோகம்!
இந்த கூட்டத்தில் அம்மா உணவகத்தில் பழுதாகியுள்ள இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பாத்திரங்களை மாற்ற 7.6 கோடி ரூபாய் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது