கப்பலூர் டோல்கேட் விவகாரம்: வணிகர்கள் கடையடைப்பு, உண்ணாவிரதம்.. ஆர்.பி.உதயகுமார் கைது!

By KU BUREAU

கப்பலூர் டோல்கேட்டை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள டோல்கேட்டை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இது சம்பந்தமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் இன்று உண்ணாவிரதப் போராட்டம் இருக்க ஆர்.பி.உதயகுமார் முடிவு செய்தார்.

இதையொட்டி திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். அங்கு சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் வந்த போது அவரை போலீஸார் கைது செய்ய வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.பி.உதயகுமார், பொதுமக்களிடம் மனுக்கள் வாங்க அனுமதி தாருங்கள் என்ற போது போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் ஆர்.பி.உதயகுமாருக்கும், போலீஸாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்பு மனு வாங்க போலீஸார் அனுமதி தந்தனர். அதனைத் தொடர்ந்து மனுக்கொடுக்க வந்த அப்பகுதி பொதுமக்களையும், ஆர்.பி.உதயகுமாரையும் போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், " கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார் .தற்போது அவர் முதலமைச்சராக மூன்று ஆண்டுகளாகியும் டோல்கேட் அகற்றப்படவில்லை எனவே அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உண்ணாவிரதம் இருக்கிறோம்" என்று கூறினார். கைது செய்யப்பட்டவர்களை மேல கோட்டையில் உள்ள கல்யாண மண்டபத்தில் போலீஸார் அடைத்து வைத்தனர் அந்த மண்டபத்தில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை ஆர்.பி.உதயகுமார் ஈடுபட்டார்

அப்போது அவர் பேசுகையில், " தென் தமிழகத்தில் நுழைவாயிலாக கப்பலூர் டோல்கேட் விதிமுறையை மீறி கடந்த 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டண முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தற்போது 2021-ம் ஆண்டிலிருந்து அந்த விதிமுறை தளர்த்தப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டணம் வசூலித்து மக்களை கசக்கி பிழிகின்றனர். இதற்கு எதிராக போராடினால் மக்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. இந்த கப்பலூர் டோல்கேட் விதிமுறை மீறி அமைக்கப்பட்டதால் அதை வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் போராட்டம் செய்து வருகிறோம். டோல்கேட் அகற்றப்பட வேண்டும் என்று திருமங்கலம் தொகுதி மக்கள் இன்று முழு கடை அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் இதுவரை நான் 22 மனுக்களை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன் ஆனால் எந்த தீர்வும் காணப்படவில்லை" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE