டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: தொல்லியல் துறை தேர்வுக்கு சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 26-ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பத்தைக் கோரியுள்ளது.

அதில், குறிப்பாக தொல்லியல் துறை தேர்வுக்கும், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் பணிகளுக்கும் சம்ஸ்கிருத பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருப்பது மிகுந்த வியப்பளிக்கிறது.

சம்ஸ்கிருத பாடம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் எதிலும் இல்லாத நிலையில் சம்ஸ்கிருத பட்டம் எவ்வாறு பெற முடியும்? அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் தேர்வாணையம் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

எனவே அரசு தலையிட்டு உடனடியாக தேர்வாணைய அறிவிப்பை ரத்து செய்து மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE