‘வாழ்க அநாமதேய ஜனநாயகம்’ - பல்லாயிரம் கோடி பாஜக தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக ப.சி பாய்ச்சல்!

By காமதேனு

’கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது பாஜக அரசு காட்டும் கரிசனம் மூலமே, தேர்தல் பத்திரங்களாக அக்கட்சி ஆதாயம் அடைந்து வருவதாக’ ப.சிதம்பரம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், பாஜகவுக்கு சேரும் அநாமதேய தேர்தல் பத்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

“இதுவரை ரூ12 ஆயிரம் கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன. மிகப்பெரும் அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அவற்றை அநாமதேயமாக பாஜகவுக்கு நன்கொடையாக அளித்துள்ளன. வெளிப்படைத் தன்மை அற்ற தேர்தல் பத்திரங்களின் வழியே கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏன் நன்கொடை வழங்க வேண்டும்?

இந்த கார்ப்பரேட் நன்கொடைகள் அனைத்தும், அவை அரசிடமிருந்து பெற்ற ஆதாயங்களுக்கு காட்டும் நன்றி மட்டுமே. ஆதாயங்கள் கமுக்கமாய் பெறப்படுகின்றன. பதிலுக்கு நன்கொடைகள் ரகசியமாய் பெறப்படுகின்றன. வாழ்க அநாமதேய ஜனநாயகம்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் ட்வீட்

பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், பதில் ஆதாயமாக தேர்தல் பத்திரங்களின் பெயரில் தொடர்ந்து பல்லாயிரம் கோடி நன்கொடைகளை பாஜக சேர்த்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரிக்காது, கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்து விடுவதும், அவற்றுக்கான முதலீட்டுக்கு பொதுத்துறை நிறுவனங்களை பணயமாக்குவதும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன்களை வாரி வழங்க பொதுத்துறை வங்கிகளுக்கு அழுத்தம் குடுப்பதாகவும்.. பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேலும் குற்றம்சாட்டி வருகின்றன. அதானி குழும விவகாரத்துக்கு பின்னர் இவை வேகமெடுத்துள்ளன. அவற்றின் அங்கமாகவே காங்கிரஸ் தலைவர் ப.சி தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக பாய்ச்சல் காட்டியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE