அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவில்லை: நிர்வாகிகளிடம் பழனிசாமி ஆதங்கம்

By KU BUREAU

சென்னை: அதிமுக ஆட்சியின் சாதனைகளை நிர்வாகிகள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை என்று ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து மக்களவை தொகுதிவாரியாக நிர்வாகிகளிடம் பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் பேசும்போது, நாங்கள் தேர்தலில் கடுமையாக உழைத்தோம். ஆனால் திமுகவின் பணநாயகம் வென்றுவிட்டது. அதனால் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் தோல்வியைச் சந்தித்தார் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் பேசிய பழனிசாமி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், அம்மா ஸ்கூட்டர் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அதிமுக அரசுதான் செயல்படுத்தி உள்ளது. அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய் நிர்வாகிகள் சேர்க்கத் தவறிவிட்டனர். அதனால்தான் நாம் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்து இருக்கிறோம்.

எனவே நிர்வாகிகள் அனைவரும் மாதந்தோறும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும். பொதுமக்களைச் சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால்தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் நாம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE