திமுக ஆட்சியை அகற்ற சதித் திட்டம் தீட்டி வருகின்றனர்: முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி தகவல்

By காமதேனு

"எப்படியாவது திமுக ஆட்சியை அகற்ற பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டி வருகின்றனர். சாதி, மத கலவரத்தை தூண்டலாமா என சிலர் முயற்சி செய்து வருகின்றனர்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், பின்னர் திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 14.5 அடி உயர திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். அப்போது, நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “எந்த லட்சியத்திற்காக தலைவர் கருணாநிதி, அண்ணா ஆகியோர் பாடுபட்டார்களோ அதனை நிறைவேற்ற வேண்டும். ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் நமது கடமையை ஆற்றிட வேண்டும்.

கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

நம்மை பாராட்டுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தமிழர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பாராட்டி வருகின்றனர். வெளிநாடுகளில் உள்ளவர்களும் ஆட்சியின் சாதனையை பார்த்து வாழ்த்தி வருகின்றனர். ஆனால் சிலர் எப்படியாவது திமுக ஆட்சியை அகற்ற பல்வேறு சதி திட்டங்கள் தீட்டி வருகின்றனர். சாதி, மத கலவரத்தை தூண்டலாமா என சிலர் முயற்சி செய்து வருகின்றனர். நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்த திட்டமிட்டு சதி திட்டங்களை தீட்டுகின்றனர்.

தங்களை விளம்பரப்படுத்த அவர்கள் நம் மீது விமர்சனத்தை வைக்கின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பான கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்றுபட்டால் தான் அகற்ற முடியும். இதை நீங்கள் செய்தால் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE