சென்னை: தமிழகத்தில் அரங்கேறும் கொலை சம்பவங்கள் அரசுடன் தொடர்புடையவை கிடையாது. முன்விரோதம், பழிவாங்கும் நடவடிக்கையாக இச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தமிழகம் கொலை மாநிலமல்ல, கலை அறிவுசார் மாநிலம் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து, நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொடர் தோல்வியின் விரக்தியால் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டதாக புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளார். தமிழகம் கொலை மாநிலமல்ல. கலை மற்றும் அறிவுசார் மாநிலம். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவமானது அன்றைய ஆட்சியாளர்களின் திறமையின்மை அல்லது ஏதேனும் சதியின் காரணமாக நடைபெற்றிருக்கலாம்.
தற்போது தமிழகத்தில் நடந்துள்ள 4 சம்பவங்களும், அரசுடன் தொடர்புடையவையல்ல. அனைத்தும் சொந்த காரணங்களுக்காக அல்லது முன்விரோதம் அடிப்படையில் நடைபெற்றுள்ளன. எனவே, சட்டம்- ஒழுங்கு சீர்குலையும் அளவுக்கு எந்த சம்பவமும் நடைபெறவில்லை.
ரவுடி பட்டியலை எடுத்து அவர்களுக்குள் முன்விரோதம் உள்ளதா என்பதையும் கண்டறிந்து தீர்த்து வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பல ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலரை கைதும் செய்துள்ளோம். பழிவாங்கும் முயற்சியாகவும் சில சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு அரசு பொறுப்பாக முடியாது. இதை தடுக்க அரசு நிறைய முயற்சி எடுத்து வருகிறது.
» தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை: அண்ணா பல்கலை. சிண்டிகேட் முடிவு
» தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடும் திட்டம்: விரைவில் அமலாகிறது
சிறார் சீர்திருத்தப் பள்ளிகளில் இருந்து வருபவர்களை நன்னடத்தை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். இதேபோல் முன்னாள் குற்றவாளிகளையும் புதிதாக வருவோரையும் கண்காணித்து வருகிறோம்.
அரசியல் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் பாதுகாப்பு தர தயாராக உள்ளோம். ஆணவப் படுகொலையை நாங்கள் ஆதரிக்கவில்லை. குற்றவியல் துறை இயக்குநராக அசன் முகமது ஜின்னாவை நியமித்துள்ளது தற்காலிகமாகதான். குற்றவியல் வழக்கறிஞராக 15 ஆண்டுகளுக்கும் மேல் அவர் பணியாற்றியுள்ளார். இதனால் அவரை இப்பதவியில் நியமிக்க விதிகளில் இடமுண்டு. இதுதவிர, லோக் ஆயுக்தா தலைவர் விஷயத்தில் முதல்வர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார்.
தமிழகத்தில் பழுதாகியுள்ள கிளைச் சிறைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதுவும் மூடப்படவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.