தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடும் திட்டம்: விரைவில் அமலாகிறது

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின்கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு இலவசமாக போடப்படுகிறது. இத்தடுப்பூசிகள் காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின்-ஏ குறைபாடு உள்ளிட்ட 12 பாதிப்புகளுக்கு வழங்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் வாரம்தோறும் புதன்கிழமை குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிகள் கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், அரசு மருத்துவமனைகளை போலவே, தனியார் மருத்துவமனைகளிலும் தேசிய தடுப்பூசி அட்டவணையில் உள்ள தடுப்பூசிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

தேசிய தடுப்பூசி அட்டவணையின்கீழ் குழந்தை பிறந்தது முதல்10 வயது வரை 11 வகையான தடுப்பூசிகள் 12 வகையான பாதிப்புகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சில தடுப்பூசிகளையும் சேர்த்து 18 வயது வரை போடப்படுகிறது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டணமும் பெறாமல் இலவசமாக தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கவேண்டும். அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உத்தரவாதம் அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் செயல்படும். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE