நகர்ப்புற உள்ளாட்சிகளில் பருவமழை தொடங்கும் முன்பு அனைத்து பணிகளையும் முடிக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

By KU BUREAU

சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் கழிவுநீர், மழைநீர், சாலைப்பணிகளை பருவமழை தொடங்கும் முன்பு முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருதலைமையில், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும்வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அமைச்சர் நேரு பேசியதாவது:

குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை பணிகளை தினசரி கண்காணிப்பதுடன், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், மின் மோட்டார்கள், வால்வுகள் மற்றும் மின்மாற்றிகளை அவ்வப்போது ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார்களை 24 மணி நேரத்துக்குள் நிவர்த்தி செய்வதை அந்தந்தப் பொறுப்பு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

மழைக் காலத்துக்கு முன் நீர்நிலைகள், ஏரி, குளம் போன்றவைகளை தூர்வாரி ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள மழைநீர் வடிகால்களில் அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்வதுடன், விடுபட்டுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால்களை கட்டி முடிக்க வேண்டும்.

சிறு பழுதடைந்த சாலைகள் அனைத்தையும் பார்வையிட்டு, மழைக்காலத்துக்கு முன்னர் பழுதுகளை சீர்செய்து, சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.

பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றியும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையங்கள் மற்றும் சந்தை வளாகங்கள் காலை, மாலை என இருநேரமும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கும் தேவையான குடிநீர் வழங்க சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தேவையான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும்.மேலும், நடைபெற்றுவரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பிற்பகலில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: முதல்வர் அறிவுறுத்தல்படி, நீர்வளத்துறையின் ஏரிகள் மற்றும் குளங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை காலத்தில் தண்ணீர் தேங்காவண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் காணப்படும் ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அகற்றி, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். சாலைகளில் காணப்படும் பள்ளம் மற்றும் மேடுகள் உடனடியாக சரிசெய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE