தமிழக - கேரள எல்லையில் மதுக்கடையை மூடக் கோரி காங். தொடர் உண்ணாவிரதம்: 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

By எல்.மோகன்

நாகர்கோவில்: தமிழக - கேரள எல்லையான களியக்காவிளை அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கோழிவிளை டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி காங்கிரஸ் கட்சியினர் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

கோழிவிளை டாஸ்மாக் மதுக்கடை பகுதியில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி, தனியார் பள்ளிகள் அமைந்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி இங்குள்ள டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் மருத்துவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனால் இப்பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பல அமைப்பினரும், பொதுமக்களும் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி பொதுமக்கள் சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது வட்டாட்சியர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு மாதத்தில் டாஸ்மாக் கடையை மூடுவதாக உறுதியளித்தனர். ஆனால் கடையை இதுவரை மூடவில்லை.

இதையடுத்து, டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் கோழிவிளையில் மதுகடை அருகே தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று துவங்கியது. இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். தாரகை கத்பர்ட் எம்எல்ஏ மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE