மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை: குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு

By த.அசோக் குமார்

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், குற்றாலம் அருவிகளில் இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கான தடை தொடர்கிறது.

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் செங்கோட்டையில் 36.20 மி.மீ., குண்டாறு அணையில் 28.60 மி.மீ., கடனாநதி அணையில் 28 மி.மீ., அடவிநயினார் அணையில் 16 மி.மீ., தென்காசியில் 15.20 மி.மீ., ராமநதி அணையில் 12 மி.மீ., ஆய்க்குடியில் 10 மி.மீ., கருப்பாநதி அணையில் 5.50 மி.மீ. மழை பதிவானது.

தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 74 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 78.50 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 113.50 அடியாகவும் உள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.17 அடியாக உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

மலைப் பகுதிகளில் பெய்த மழையால் குற்றாலம் பிரதான அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், மாலையில் ஐந்தருவியிலும், அதைத் தொடர்ந்து பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழையால் இன்றும் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE