தமிழை கொல்லும் பள்ளிகள் அதை மூடி பொரிகடலை வியாபாரம் செய்யலாம்: ராமதாஸ் ஆதங்கம்

By காமதேனு

``தமிழை கொல்லும் பள்ளிகள் அதை மூடி பொரிகடலை வியாபாரம் செய்யலாம்'' என ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.

தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரசார பயணத்தை பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிப்.21-ல் சென்னையில் தொடங்கி வைத்தார். இப்பயணம் மதுரையில் இன்று மாலை நிறைவடைகிறது. திண்டுக்கல்லில் நடந்த பிரசார பயண பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், `` நமது வீடுகளில் பிற மொழி கலந்த பேச்சு 95 சதவீதம் பேசுகிறோம். இப்போக்கை மாற்ற குழந்தை பருவம் முதல் வீடுகள், பள்ளிகளில் தமிழில் பேச கற்றுக்கொடுக்க வேண்டும். நம் தாய்மொழியான தமிழ் வேகமாக அழிந்து வருகிறது. வீடுகளில் 10-ல் 5 வார்த்தை தமிழ், ஏனைய 5 வார்த்தை ஆங்கிலம் மற்றும் பிறமொழி பேசும் நிலை தற்போது நிலவுகிறது.

தமிழகத்தில் அப்துல் கலாம் உள்பட பல அறிஞர்கள் தமிழில் தான் படித்துள்ளனர். தமிழை கட்டாய பாடமொழியாக்க வேண்டும் என அரசு சட்டம் போட்டாலும் இதனை எதிர்த்து ஒரு சில பள்ளிகள் நீதிமன்றம் செல்கின்றன. தமிழை அழிக்க நீதிமன்றம் செல்லாதீர்கள் என பள்ளி நிர்வாகங்களை நாம் அனைவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழில் கல்வி பயில வேண்டும் என தமிழக அரசின் சட்டத்தை மதிக்க வேண்டும். தமிழகத்தில் கல்வியை வணிகம் செய்கின்றனர். பள்ளிகளில் பிரிகேஜி வகுப்பு குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் வசூலிக்கின்றனர். தமிழை கொல்ல பள்ளி நடத்துகின்றனர். அதற்கு பள்ளிகளை மூடி பொரிகடலை வியாபாரம் செய்யலாம்'' என்று ஆவேசமாக பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE