ஏரியில் 5 பொக்லைன்கள் கொண்டு வண்டல் மண் எடுப்பு: போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்

By பெ.பாரதி

அரியலூர்: செந்துறையில் ஒரு சிறிய ஏரியில் ஒரே சமயத்தில் 5க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு வண்டல் மண் எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் காரைக்குளம் எனும் சிறிய ஏரி உள்ளது. இந்த ஏரியை அவ்வூர் மக்கள் விவசாயத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் நீர் அதிகரிக்கும் என மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஒரு பொக்லைன் இயந்திரம் கொண்டு மண் அள்ளாமல் 5-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் கொண்டு வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து இரும்புலிகுறிச்சி இளைஞர்கள், இன்று காலையில் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இரும்புலிகுறிச்சி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் விஷ உயிரினங்கள் உலாவி வருவதால் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், ரேஷன் கடை கட்டித்தர வேண்டும், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும், கிராமத்துக்கு போதிய குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும், பழுதான தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் இந்தப் போராட்டத்தின் வாயிலாக வலியுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE