'அரசியலுக்கு இளம் தலைமுறையினர் வந்தால் முதியவர்கள் விலகிக் கொள்வோம்' என்ற தனது கருத்துக்கு கூடுதல் விளக்கம் தந்துள்ளார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவரான கமல்ஹாசன்.
அண்மையில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றினார். பெருந்திரளான இளம் தலைமுறையினர் மத்தியில் அவர் உரையாற்றும்போது, ”இந்தியர்களின் சராசரி வயது 29. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 54. இந்த வித்தியாசம் பெரிது. இது களையப்பட வேண்டும். மூத்தவர்களை ஒதுக்கிவிட்டு இளம் தலைமுறையினர் இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டும். உங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது உறுதியானால் சந்தோஷமாக ஓய்வெடுக்கச் செல்வோம்” என்றார். இவை உட்பட கமல்ஹாசனின் வருகைக்கும், உரைக்கும் மாணவ மாணவியர் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டிருந்தது.
இதையொட்டிய குறுவீடியோ ஒன்றினை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கமல்ஹாசன், தனது உரையின் கருத்தினை உறுதி செய்ததோடு, ‘மாணவர்களிடம் கரைபுரண்டோடிய உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது’ என்றும் மகிழ்ச்சியும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே ‘கமல் பண்பாட்டு மையம்’ என்ற அறக்கட்டளை ஒன்றையும் கமல்ஹாசன் தொடங்கி உள்ளார். கலை இலக்கிய மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் இதர சில பொதுச்சேவை நோக்கங்களுக்காகவும் இந்த அறக்கட்டளை செயல்படும் என்றும் அரசியல் மற்றும் லாப நோக்கமற்று செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.