மின் கட்டண உயர்வு: ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேஸ்வரம்: மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேஸ்வரம் மின்வாரியம் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் செந்தில்வேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அந்தோணி பீட்டர், ஜோதிபாசு, முனீஸ்வரன், பூமாரி, லெட்சுமி, ஆரோக்கிய மேரி, தினேஷ்குமார், சேகர், ஆதித்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று மத்திய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறவும், சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திடவும் வலியுறுத்தப்பட்டது.

இதேபோல், தங்கச்சி மடம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகாச் செயலாளர் ஆரோக்கியநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகானந்தம், ரவிச்சந்திரன், காரல் மார்க்ஸ், இன்னாசிமுத்து, சத்தியசீலன், பெனடிக், புரூஸ் லீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களது கண்களை கருப்புத் துணிகளால் கட்டிக் கொண்டும், கையில் அரிக்கேன் விளக்குகளை ஏந்தியும் கவனத்தை ஈர்த்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE