ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

By காமதேனு

பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் தீவிரமாக உள்ளதாக குற்றம்சாட்டி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுயேச்சை வேட்பாளர் கண்ணன் என்பவர் வழக்குத் தொடந்திருந்தார்.

இதேபோல பிரச்சாரத்தின்போது தங்கள் கட்சியினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பிரச்சாரத்துக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் சட்டத்துறை செயலாளர் சேவியர் பெலிக்ஸ் வழக்குத் தொடர்ந்திருந்தார். போதுமான அளவு மத்திய படை பாதுகாப்பு, சிசிடிவி கேமிரா, வெப்காஸ்டிங் வசதி ஆகியவற்றை அமைக்க உத்தரவிடவும் கோரிக்கை வைத்திருந்தார்.

தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மதுபானம் விநியோகம் செய்வதற்காக ஆளும்கட்சியினர் சட்டவிரோதமாக அமைத்துள்ள கொட்டகைகளை அகற்றக் கோரி மற்றொரு சுயேச்சை வேட்பாளர் ரவி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகினார்.

பணப்பட்டுவாடாவைத் தடுக்க கண்காணிப்பு குழுக்களும், பறக்கும்படைகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தேர்தலை நியாயமாக நடத்துவது குறித்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புகார்கள் தொடர்பாக விசாரித்து, முகாந்திரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் தொகுதியில் 163 கொட்டகைகள் கண்டறியப்பட்டு, அதில் 107 கொட்டகைகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. 42 கொட்டகைகளை சம்பந்தப்பட்ட கட்சியினரே அகற்றிவிட்டனர். மீதமுள்ளவற்றிற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 19 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில், தமிழக காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற்று விட்டு வழித்தடத்தை மீறி பேரணி சென்றதாகவும், பிளாஸ்டிக் பைப்புகளில் இரும்பு பைப்புகள் பொருத்தி வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக இடையேயான மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பணப்பட்டுவாடா புகாரை பொறுத்தவரை, எந்த தேதியில், யார் பணம் கொடுத்தார்கள், பெற்றார்கள் என்பது தொடர்பான விவரங்கள் இல்லை. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால் அவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி, தேர்தலை நிறுத்தக் கோரி கண்ணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நாம் தமிழர் மற்றும் ரவி தொடர்ந்த வழக்குகளில், அதிமுக தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுதாரர்களின் புகார்களைப் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்குகளை முடித்துவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE