பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்துக்கு வந்த 2 ரசாயன லாரிகள் தீப்பிடித்து சேதம்: ஓட்டுநரின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

By KU BUREAU

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் 2 ரசாயன லாரிகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டைமற்றும் திருமழிசை பகுதிகளில்தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்ததொழிற்சாலை களுக்கு தேவையான மூலப் பொருட்கள், பிற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லாரிகளில் கொண்டு வரப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நசரத்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைக்கு தேவையான, ‘தின்னர்’ என்ற ரசாயனம் நேற்று அதிகாலை கன்டெய்னர் லாரியில் வந்தது. தொழிற்சாலை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரியில் இருந்து, ரசாயன கேன்களை இறக்கி வேறு ஒரு லாரிக்கு தொழிலாளர்கள் மாற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு கேன் தவறி விழுந்ததால், கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே, தொழிலாளர்கள் இணைந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மற்றொரு லாரிக்கும் பரவியது. அப்போது அந்த லாரியில் பற்றியதீயை தொழிலாளர்கள் உடனடியாக அணைத்தனர்.

அதேநேரம் தொழிற்சாலை அருகே வாகன நிறுத்துமிடத்தில் நின்ற கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட 40-க்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைக்கு தீ பரவாமல் இருப்பதற்காக, தீப்பிடித்துஎரிந்த லாரியை ஓட்டுநர் சாதுரியமாக ஓட்டிச் சென்று, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சேவை சாலையில் நிறுத்தினார்.

கன்டெய்னர் லாரியை சேவை சாலைக்கு கொண்டு சென்றபோது, லாரியிலிருந்து சாலையில் கொட்டிய ரசாயனத்தால் சாலை முழுவதும் சிறிது நேரம் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்து, பூந்தமல்லி, ஆவடி, இருங்காட்டுக்கோட்டை, மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், அம்பத்தூர், கோயம்பேடு ஆகிய 7 தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயைஅணைத்தனர். இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE