அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பையடுத்து மதுரையில் இருந்து ஓபிஎஸ் இன்று மாலை சென்னை செல்கிறார்.
அதிமுக பொதுக்குழு கடந்தாண்டு ஜூலை 11-ல் நடந்தது. இதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு செப்.2-ல் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் 2022 ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதிசெய்தது. இதனையடுத்து , ஓபிஎஸ் தரப்பினர் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.
இந்த நிலையில், பெரியகுளத்தில் இருந்த ஓபிஎஸ், தேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயார் சரஸ்வதி அம்மாளை பார்த்து நலம் விசாரித்த அவர் வீடு திரும்பி அமைதி காத்தார். அவர் பங்கேற்பதாக இருந்த திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து மதுரையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4.30 மணிக்கு ஓபிஎஸ் சென்னை செல்கிறார். சென்னையில் நாளை நடைபெறவுள்ள ஜெயலலிதா பிறந்த நாளில் பங்கேற்க செல்வதாக கூறப்படுகிறது. அங்கு செல்லும் ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு குறித்து அறிய அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.