சென்னை: தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து, தண்ணீரை சேமிக்க சரியான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக விவசாயிகளுக்கு தேவையான நீரை கேட்டபோது கொடுக்காமல் ஒரு டிஎம்சி நீரை தினந்தோறும் தமிழகத்துக்கு தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் உடன்படாத கர்நாடக அரசு, இயற்கையின் முன் மண்டியிட்டுள்ளது.
தமிழக அரசு இனிமேலாவது நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து இயற்கை நமக்கு கொடையாக வழங்கி வரும் நீரை வீணாக் கடலில் கலக்காமல் தடுக்க, தடுப்பணைகளை அமைத்து தொலைநோக்கு பார்வையோடு அவற்றை சேமிக்க திட்டமிடவேண்டும்.
குடிநீருக்காக யாரிடமும் இனிவரும் காலங்களில் மண்டியிடாத தன்னிறைவு பெற்ற தமிழகத்தை இந்த அரசு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.