பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி: புதுவை ஆளுநராக கைலாசநாதன் நியமனம்

By KU BUREAU

புதுச்சேரி: குஜராத்தில் பணிபுரிந்து, விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதன், புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக புதுவைக்கு தனி துணைநிலை ஆளுநர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு ஆளுநர்களே புதுவையை நிர்வகித்து வந்தனர். இந்நிலையில், குஜராத்தில் பணிபுரிந்து, விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதன் புதுவை துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மூ பிறப்பித்துள்ளார்.

1953-ல் பிறந்த கைலாசநாதன், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. வேதியியல், வேல்ஸ் பல்கலை.யில் எம்.ஏ. பொருளாதாரம் பயின்றவர்.

இவரது தந்தை உதகையில் அஞ்சல் துறையில் பணிபுரிந்ததால், கைலாசநாதன் உதகையில் வளர்ந்தார். 1979 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியான கைலாசநாதன், குஜராத்தில் 1981-ல் உதவி ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார்.

தொடர்ந்து, ஆட்சியர் உள்ளிட்டபல்வேறு பதவிகளில் பணியாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது , குஜராத் மாநில முதன்மை தலைமைச் செயலராகப் பணிபுரிந்தார். மொத்தம் 45 ஆண்டுகள் குஜராத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்து, தற்போதும் மோடிக்கு நெருக்கமானவராக இருந்து வருகிறார்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "அகமதாபாத் நகராட்சி ஆணையராக கைலாசநாதன் பொறுப்பு வகித்தபோது, 43 கி.மீ. நீளத்துக்கு குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் அவசரகால நீர் விநியோகத்துக்கான ரஸ்காதிட்டம் போன்றவற்றில் முக்கியப்பங்காற்றினார். மோடி பிரதமரானபிறகும், தொடர்ந்து முக்கியப் பொறுப்பில் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்தார். 18 ஆண்டுகள் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய கைலாசநாதன், கடந்த ஜூன் மாதம் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சர்தார் சரோவர் நர்மதா நிகம் நிறுவனத் தலைவராகவும், காந்தி ஆசிரம மறுமேம்பாட்டுத் திட்ட நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார். தற்போது புதுவை துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்" என்றனர்.

புதுவை பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன்வரும் 31-ம் தேதி கூடுகிறது. பட்ஜெட் உரையை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாசிக்க உள்ளார். ஆகஸ்ட் முதல்வாரத்தில் கைலாசநாதன் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE