பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு; துண்டுபிரசுரம் அச்சிட்டு காங்கிரஸார் வழங்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

By KU BUREAU

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் உள்ள அப்பட்டமான அரசியல் பாகுபாடு காரணமாக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்கிற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளன.

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 3.49 சதவீதமாகும். மற்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல ரயில்வே திட்டங்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக நிதி ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திண்டிவனம் - செஞ்சி, திருவண்ணாமலை புதிய வழித்தடம் 70 கி.மீ. தூரத்துக்கு அமைக்க ரூ. 267 கோடி திட்ட மதிப்பீட்டில் 2006 - 2007 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்துக்கான தற்போதைய மதிப்பீடு ரூ.900 கோடி. கடந்த 2017-18 முதல் 2024 - 25 வரை மொத்தம் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.192 கோடிதான். அதனால் இந்த திட்டம் ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது.

வேலூர் மாவட்டம் அத்திப்பட்டில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக புத்தூருக்கு 88.30 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க இதுவரை ஒதுக்கப்பட்ட தொகை ரூ.108 கோடி. இதற்கு இதுவரை ஒப்பந்தப்புள்ளி கோரப்படாமல் முடக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் பாதை ஆவடி வழியாக 60 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க 2012 - 13-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டத்துக்கும் போதிய நிதி ஒதுக்கவில்லை.

சென்னையில் இருந்து மகாபலிபுரம் - மரக்காணம், புதுச்சேரி வழியாக கடலூர் துறைமுகம் வரை 178.28 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.523.52 கோடியில் புதிய ரயில் பாதை அமைக்க 2008-09 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் முடங்கியுள்ளது. இந்த பாரபட்சத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கட்சியினர் அனைவரும் துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு விநியோகிக்க வேண்டும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE