சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1,355 கோயில்களில் திருப்பணி முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழாக்களை நடத்தியும், ரூ.3,776 கோடியில் 8,436 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டும் அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் ஆயிரக்கணக்கான திருக்கோயில்களைக் கொண்டு உள்ளது. கோயில்களுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள், ஐம்பொன் சிலைகள், தங்கம், வெள்ளி நகைகள் எல்லாம் முறையாகப் பராமரிக்கப்படாமல் பலரின் ஆக்கிரமிப்பில் முடங்கி பயன்படாமல் கிடந்தன.
இந்நிலையில், 1925-ம் ஆண்டு பனகல் அரசர் முதல்வராக இருந்தபோது இந்து சமய அறநிலையங்கள் துறை நாட்டிலேயே முதன்முதலில் தொடங்கப்பட்டது. அதன்பின், 1970-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியில்தான் அறநிலையத் துறைக்குத் தனி அமைச்சர், தனி பட்ஜெட், பேரவையில் தனி விவாதம் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின், 2021-ம் ஆண்டு மே 7 முதல், இந்தாண்டு ஜனவரி 31-ம் தேதி வரை 3 ஆண்டுகளில் 1,355 கோயில்களில் திருப்பணி முடிக்கப்பட்டு, திருக் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன. மேலும், ரூ.3,776 கோடியில் 8,436 கோயில்களில் 18,841 திருப்பணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, 5,775 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அன்னதானத் திட்டம் இதுவரை 756 திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் அறநிலையங்களுக்கு சொந்தமான நிலம், கட்டிடம், மனைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.5,577.35 கோடி மதிப்பு 6140.59 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் 1,59,507 ஏக்கர் நிலங்கள் நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு, 64,522 கற்கள் நடப்பட்டுள்ளன. 4,189.88 ஏக்கர் நிலம்கோயில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது.
கணினி சிட்டாவில் தவறுகள் திருத்தப்பட்டு 3,078.95 ஏக்கர் நிலம் கோயில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது. திருக்கோயில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது. துறை சார்பில், ரூ.411.45 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. கோயில்களுக்கு சொந்தமான பலமாற்று பொன் நகைகள் உருக்கப்பட்டு, தங்கக்கட்டிகளாக மாற்றியதில், ரூ.191.65 கோடி மதிப்புடைய தங்கக் கட்டிகள் வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கோயில்களில் பணியின்போது இறந்த 106 பணியாளர்களின் வாரிசுதார்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
சிலைகள் பராமரிப்பு: கோயில்களில் உள்ள சிலைகள் மற்றும் செப்புப் பட்டயம் குறித்து இதுவரை 297 கோயில்களில் கள ஆய்வுகள் செய்யப்பட்டன. பராமரிப்புப் பணி முடிக்கப்பட்ட இலக்கிய ஓலைச்சுவடிகளை ஒளிவருடல் செய்ய தமிழ் இணைய கல்விக்கழகம் தொடர்பு கொள்ளப்பட்டு, தமிழ்நாடு எல்காட் நிறுவனம் மூலம் ஒளிவருடல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பல்வேறு பணிகளுக்காக பொதுமக்களும். பக்தர்களும் முதல்வரை பாராட்டி வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.