பணியின்போதே உடல் நலக்குறைவு: பேருந்தை சாலை ஓரம் நிறுத்தி பயணிகளை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: அரசுப்பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு பணியில் இருந்த போதே திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் துரிதமாக பேருந்தை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் தாந்தோணிமலையைச் சேர்ந்தவர் அன்பு (41). இவர் கரூர் மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவர், ஈரோட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசுப் பேருந்துதை ஓட்டிச் சென்றார். கரூர் மாவட்டம் லாலாபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் பேருந்து சென்றபோது ரத்த அழுத்தம் குறைந்ததால் அன்புவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடந்து அன்பு சிரமப்பட்டு பேருந்து இயக்கிய நிலையில் சிறிது தூரம் சென்றதும் பேருந்து இயக்க சிரமம் ஏற்பட்டது.

இந்தநிலையில் பேருந்தை சாலையில் இருந்து இறக்கி சாலை ஓரம் பாதுகாப்பாக நிறுத்தியவர், தனது உடல்நலபாதிப்பு குறித்து நடத்துநரிடம் தெரிவித்தார். உடனடியாக நடத்துனர் தனியார் ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்த பயணிகள், அங்கிருந்து பழவியாபாரிகள் உதவியடன் ஓட்டுநரை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். குளித்தலை அரசு மருத்துவமனையில் ஓட்டுநர் அன்பு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த 35 பயணிகளை மாற்றுப் பேருந்து மூலம் அவர்கள் செல்லும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையிலும் பயணிகளை பாதுகாக்கும் நோக்கில் பேருந்தை சாலையோரம் இறக்கி நிறுத்தி உடல் நலக்குறைவு குறித்து தகவலளித்த பேருந்து ஓட்டுநரின் செயல் பயணிகளிடம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE