எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு: வடக்கு பகுதியில் ரயில்வே கட்டிடம் இடிப்பு பணி தீவிரம்

By மு.வேல்சங்கர்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிக்காக, ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் கவுன்டர் மற்றும் முன்பதிவு அலுவலகம் செயல்பட்ட ரயில்வே கட்டிடம் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, மறுசீரமைப்பு பணி ரூ.734.91 கோடியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. முதல்கட்டமாக, எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஊழியர்கள், அதிகாரிகள் குடியிருப்புகள் இடிப்பு, மரங்கள் அகற்றுதல் பணி முடிந்த பிறகு, ரயில்வே கட்டிடம் அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கியது.

இதையடுத்து, எழும்பூர் ரயில் நிலையத்தை ஒட்டி காந்தி இர்வின் சாலை பக்கமும், பூந்தமல்லி சாலை பக்கமும் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மறுசீரமைப்புப் பணிக்காக, எழும்பூர் ரயில் நிலையத்தின் வடக்குபகுதியில் அமைந்திருந்த ரயில்வே கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அடித்தளப் பணி நிறைவடைந்துள்ளது. இங்கு இரண்டு தளம் வரை கட்டிடம் எழுப்பட்டுள்ளது. இதுதவிர, எழும்பூர் ரயில் நிலையத்தின் காந்தி - இர்வின் மற்றும் பூந்தமல்லி பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக இடம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இதற்கிடையில், ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் (பூந்தமல்லி சாலை பக்கம்) ரயில்வே கட்டிடம் இடிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த கட்டிடத்தில் புறநகர் ரயில் டிக்கெட் கவுன்டர், முன்பதிவு டிக்கெட் கவுன்டர் உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டன. இந்த கட்டிடம் இடிக்கும் பணி 20 நாட்களுக்கு முன்பு தொடங்கி, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும். இங்கு ரயில்வே அலுவலகம் அல்லது வணிக வளாகம் இடம்பெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE