பழங்குடியினர் நலத் துறை பள்ளிகளில் 438 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

By என்.சன்னாசி

மதுரை: பழங்குடியினர் நலத் துறையில் உள்ள பள்ளிகளில் 438 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாக உள்ளது. உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை 2016 முதல் தனிப் பொறுப்புடன் கூடிய முழு அதிகாரத்துடன் இயங்கி வருகிறது. இத்துறையில் 212 உண்டு உறைவிட தொடக்கப் பள்ளிகள், 49 நடுநிலைப் பள்ளிகள், 31 உயர்நிலைப் பள்ளிகள், 28 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 8 ஏகலைவா மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 328 பள்ளிகள் செயல்படுகின்றன. 29,774 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில் 210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 179 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 49 முதுகலை பட்டாதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 438 பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரந்தரமாக நிரப்பப்படவில்லை.

300 பணியிடங்களில் மட்டும் தற்காலிக தொகுப்பூதிய பணி நிரவல் மூலம் சமாளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2024-25 கல்வி ஆண்டில் காலி பணியிடங்களை நிரப்ப எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பல பள்ளிகள் ஆசிரியர்கள் இன்றியும், பெரும்பாலான பள்ளிகள் ஓராசிரியர் மட்டும் பணிபுரியும் பள்ளிகளாகவும் செயல்படுகின்றன. இதனால், இப்பள்ளிகளில் படிக்கும் பழங்குடியின மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

கருப்பையா

இது குறித்து தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவர் கருப்பையா கூறியதாவது: கடந்த 7 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் 300 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் 2024-25-ம்கல்வி ஆண்டு தொடக்கத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணி நிறுத்தம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைமை நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, அவர்கள் மீது புனையப்பட்ட குற்றக்குறிப்பு ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். பழங்குடியினர் நலத்துறை இயக்குநராக இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அந்தஸ்தில் ஒருவரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE