சிறுமி உட்பட 3 பேரை கத்தியால் குத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் @ திருச்செங்கோடு

By கி.பார்த்திபன்

நாமக்கல்: பத்து வயது சிறுமி உட்பட மூன்று பேரைக் கத்தியால் குத்திய நபரை கைது செய்ய வலியுறுத்தி திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் - சத்தியநாயகன்பாளையம் சாலையில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள சின்னப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (44). இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டு தனது தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) வீட்டில் இருந்து வெளியேறிய செந்தில்குமார் வீட்டின் அருகே வசிக்கும் பத்து வயது சிறுமி, முத்துவேல் (37), தங்கராசு (53) ஆகிய 3 பேரை கத்தியால் குத்தியுள்ளார். இதனைத் தடுக்க வந்தவர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செந்தில்குமாரை பிடித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மூவருக்கும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே செந்தில்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் கிடையாது. அவர் நல்ல மனநிலையில் தான் உள்ளார். சிறுமியிடம் தவறாக நடந்ததை மறைக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நாடகமாடுகிறார். காவல்துறையினரும் அவருக்கு உடந்தையாக உள்ளனர். எனவே செந்தில்குமாரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் குமாரமங்கலம் - சத்தியநாயகன்பாளையம் சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்செங்கோடு காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் மக்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் செந்தில்குமார் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE