தஞ்சாவூர்: தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் இரண்டு நாட்கள் தஞ்சாவூர் சரக மாவட்டங்களில் ஆய்வு நடத்தி, காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு முதல்வர் கடந்த 2023-ம் ஆண்டு தஞ்சாவூர் காவல் சரகத்தை ஆய்வு செய்து அறிவுரை வழங்கியதின் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் இரண்டு நாட்கள் (ஜூலை 26, 27) தஞ்சாவூர் சரக மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மத்திய மண்டல காவல் துறை தலைவர் க. கார்த்திகேயன், தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் மற்றும் காவல் அதிகாரிகளுடன் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 26) மதியம் தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலந்தாய்வு கூட்ட அரங்கை திறந்து வைத்த டிஜிபி, பின்னர் சரக காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தினார். அப்போது, தஞ்சாவூர் சரகத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை கண்டறியவும் மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு உண்டான வழிமுறைகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.
மேலும் கணினி வழி குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தக்க நிவாரணம் பெறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சாலை விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சட்ட விரோதமாக விற்கப்படும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா ஆகியவற்றை விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.
தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட எதிரிகளின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்கவும் பற்றியும் காவல்துறை தலைமை இயக்குநர் குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்.
» “திட்டங்களை சரியாக செயல்படுத்தாமல் மத்திய அரசு மீது திமுக அரசு பழி சுமத்துகிறது” - அண்ணாமலை
» முன்னாள் எம்.பி. மாஸ்டர் மாதன் காலமானார்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை அஞ்சலி
தஞ்சாவூர் சரக மாவட்டங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டும் Smart Kavalar APP என்ற செயலி மூலம் காவலர்களின் ரோந்து பணி, குற்றவாளிகள் மற்றும் சாட்சிகள் அழைப்பாணையை சார்வு செய்யும் பணி, நீதிமன்ற பணி மற்றும் காவலர்களின் அன்றாட பணிகளை நெறிபடுத்த டிஜிபி தக்க அறிவுரைகள் வழங்கினார்.
சனிக்கிழமை (ஜூலை 27) காலை, டிஜிபி தஞ்சாவூர் சரக மாவட்டங்களில் உள்ள காவலர்களுக்கு குறை தீர்க்கும் முகாம் நடத்தினார். அதில் 482 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுடைய குறைகளின் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து உடனடி தீர்வு கண்டார்.
தஞ்சாவூர் சரக மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்தும், குற்ற சம்பவங்களில் திருடுபோன பொருட்களை மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்தும், மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்தும், நற்பணி செய்த 67 காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பணி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மேலும் தஞ்சாவூர் சரகத்தில் புதிதாக கட்டப்படும் காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் பழுதுகளை கண்டறிந்து அவைகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்தார்.