பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

By KU BUREAU

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்திருந்து. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் மூத்த நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன்படி தாம்பரத்தில் டி.ஆர்.பாலு, தூத்துக்குடியில் கனிமொழி, பெரம்பலூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திருவண்ணாமலையில் கு.பிச்சாண்டி, விருதுநகரில் கிரிராஜன் எம்.பி., திருச்சியில் மாநகர (கிழக்கு) செயலாளர் மதிவாணம், மதுரையில் மாவட்ட செயலாளர் கோ.தளபதி ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை சைதாப்பேட்டையில் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், தா.வேலு எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் கட்சி அளவிலான கிழக்கு, வடக்கு, வடகிழக்குமாவட்டங்கள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பங்கேற்று பேசியதாவது:

தமிழர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை, தமிழும் இல்லை, தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை. இந்த வஞ்சனையை தமிழக மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, வில்சன், எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம்,ஆர்.டி.சேகர், தாயகம் கவி, கே.பி.சங்கர், இ.பரந்தாமன், ஐட்ரீம்ஸ் மூர்த்தி ஜே.ஜே.எபினேசர், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE