’’கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்’’ - சி.பி.ராதாகிருஷ்ணன்

By காமதேனு

’’தமிழகத்தில் இருந்து கனத்த இதயத்துடன் ஜார்கண்ட் செல்கிறேன். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை அண்ணாமலை அமைத்துக் காட்டுவார் என்ற நம்பிக்கையில் பாஜகவிலிருந்து விடைபெறுகிறேன்’’ என ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்டார். விரைவில் ஆளுநராக பொறுப்பேற்க உள்ள நிலையில் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளையும் இன்று அவர் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ‘’ எனது வாழ்வில் மிகவும் உணர்ச்சிமயமான நாளாக இன்றைய நாளைப் பார்க்கிறேன். 17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கையில் இன்றைக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கக் காரணம் இன்றைய பாஜக அற்புதமான இளைய தலைமுறைகளின் தலைமையில் இயங்கி வருகிறது. யார் தடுத்தாலும், எத்தகைய அவதூறுகளைப் பரப்பினாலும், குற்றங்களே இல்லாத போதும் குற்றங்களை சுமத்தினாலும் எல்லாவற்றையும் கடந்து தமிழகத்தில் பாஜக ஆட்சி என்பதை அண்ணாமலை நிகழ்த்திக் காட்டுவார். ஜார்கண்டில் பழங்குடியின மற்றும் பட்டியலின மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த என்னால் முடிந்த அளவு முயற்சி செய்வேன். எனினும் கனத்த இதயத்துடன் தமிழகத்தில் இருந்து விடைபெறுகிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE