பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாய் மூலம் பாசனம் பெறும் 52 குளங்களும் முழுமையாக நிரம்பும் வரையில் தினமும் 150 கன அடி வீதம் ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறக்க அரசாரணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை தலைவரும், ராதாபுரம் எம்எல்ஏ-வுமான மு. அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில், "திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிலுள்ள 52 குளங்கள் பாசன வசதி பெற 1972-ம் ஆண்டு கோதையாறு வடிநில கோட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து, தோவாளை கால்வாய் வழியாக, ராதாபுரம் கால்வாய் மூலம் 150 கன அடி தண்ணீர் கொண்டுவர சிற்றாறு பட்டணங்கால் திட்டத்தின் மூலம் 28.8 கி.மீ. தூரத்துக்கு ராதாபுரம் கால்வாய் வெட்டப்பட்டது.

ராதாபுரம் கால்வாயில் 150 கன அடி வீதம் தண்ணீர் கொண்டு வந்து 16 ஆயிரம் ஏக்கர் நேரடி பாசனத்தின் மூலமும், 1,012 ஏக்கர் நன்செய் நிலம் 52 குளங்கள் மூலமும் பயன்பெறும் வகையில் பேச்சிப்பாறை அணையை 42 அடி உயரத்திலிருந்து 48 அடி உயரமாக உயர்த்தி கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆணை வழங்கியதால் 52 பாசன குளங்களும் நிரப்பப்பட்டு விவசாயிகள் பயன்பெற்றார்கள்.

நடப்பாண்டில் தற்போது பேச்சிப்பாறை அணையில் 42 அடி தண்ணீர் இருப்பில் உள்ளது. தொடரும் மழையால் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் அதிகளவில் கடலுக்கு திறந்துவிடப்படும் நிலையும் உள்ளது. எனவே, வரும் ஜூன் மாதம் அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நாளில் ராதாபுரம் கால்வாய் மூலம் பாசனம் பெறும் 52 குளங்களும் முழுமையாக நிரம்பும் வகையில் தினமும் 150 கன அடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பிறப்பிக்க வேண்டும்" என்று அப்பாவு கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE