கோவை: கோவை விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஹோட்டல் அரங்கில், மத்திய பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு சனிக்கிழமை மாலை நடந்தது. இதில், மத்திய இணையமைச்சர் கிஷண் ரெட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், மத்திய இணையமைச்சர் கிஷண் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் நெடுஞ்சாலை, விமான போக்குவரத்து, கடல் போக்குவரத்து ஆகியவை 60 சதவீதம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்துக்கான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.
தமிழகத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் இந்த பட்ஜெட்டில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ரயில்வே துறை திட்டங்களுக்காக கடந்த ஆண்டை விட ரூ.300 கோடி அதிகம் ஒதுக்கி, மொத்தம் ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் பெயர் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்பதால் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசு பல திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கி உள்ள போதும் அதை முறையாக செயல்படுத்துவதில் மாநில அரசு தவறி வருகிறது’’ என்றார்.
» மாநில ஹாக்கி போட்டி: சென்னை ஐஓபி அணி முதலிடம்
» மதுரையில் போலீஸ் விசாரணைக்கு சென்ற ஐடி ஊழியர் மாயம் - பரபரப்பு புகார்