கோவை - மேட்டுப்பாளையத்தில் புதிய குடிநீர் திட்டத்துக்கான குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரம்

By டி.ஜி.ரகுபதி

கோவை: குழாய்கள் பதிக்க நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் புதிய குடிநீர் திட்டத்துக்கான குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பவானி ஆற்றில் இருந்து குடிநீர் திட்டம் மூலம் தினமும் 1.20 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகரில் இருந்து வெளியேறும் கழிவுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் போன்றவை கலப்பதால் தற்போது நீர் எடுக்கும் பகுதியில் நீர் சுகாதாரம் இல்லாமல் இருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், எவ்வித கழிவுகளும் கலக்காத, பவானி ஆற்று நீர் தூய்மையாக வரும் விளாமரத்தூர் என்ற இடத்தில் இருந்து குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது, இங்கு எடுக்கும் குடிநீரை சாமண்ணா பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று, சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரூ.22.20 கோடி மதிப்பில், மேற்கண்ட புதிய குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு, கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது விளாமரத்தூர் பகுதியில் பவானி ஆற்றில் நீர் எடுக்கும் கிணறு மற்றும் புதிய நீரேற்று நிலையம் கட்டும் பணிகள் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்காக குடிநீர் குழாய்களை வனபத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து மேட்டுப்பாளையம் நகரப் பகுதிக்கு செல்லும் சாலையோரம் பதிக்க வேண்டும்.

பவானி ஆற்றுப் பகுதியில் விளாமரத்தூர் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் நீரேற்று நிலையம்.

இதற்காக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து குடிநீர் திட்டத்துக்கு தேவையான மற்ற பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். அதைத் தொடர்ந்து தற்போது 80 சதவீதம் முடிவடைந்தது, மேற்கண்ட வழித்தடத்தில் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிப்பு பணிகள் மட்டுமே நிலுவையில் இருந்தது.

அனுமதி வழங்குவது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலைத்துறையினர் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வனபத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து மேட்டுப்பாளையம் நகரப் பகுதிக்குச் செல்லும் சாலையில் குழாய் பதிக்க சாலையை தோண்ட நெடுஞ்சாலைத்துறையினர் அண்மையில் அனுமதி வழங்கினர். இதையடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் புதிய குழாய் பதித்தல், புதிய நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE