மதுரை: சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் துணையை ஊன்றி, ஆட்சியை பாஜக நடத்துகிறது என மத்திய அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி விமர்சனம் செய்தார்.
மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காதது, திட்டமிட்டு தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதையும் கண்டித்து பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இதற்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ. தளபதி எம்எல்ஏ தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக தலைமைக்கழக பேச்சாளரும், கொபசெ-யுமான திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார். அவர் மத்திய அரசை கண்டித்து பாடல்களை பாடி தனது பேச்சை தொடங்கினார்.
அவர் பேசியதாவது: “ பாஜகவுக்கு வாக்கு செலுத்தவில்லை என, தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. வேண்டுமென்றே தமிழகத்தை பாஜக அரசு புறக்கணித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு பிரதமர் 9 முறை வந்து பிரச்சாரம் செய்தார். இப்போது சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் துணையை ஊன்றி ஆட்சி நடத்துகிறார். திருக்குறளை வாசிக்கத் தெரியாமல் வாசித்து பிரச்சாரம் செய்தார். ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை புறக்கணித்தனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டிடமே இன்றி ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிப்பை மருத்துவ மாணவர்கள் முடித்துவிட்டனர். தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு, கூழைக்கூம்பிடு போட்டும் 40 தொகுதிகளிலும் தோல்வியை தந்த தமிழக மக்களை புறக்கணிக்கிறது.” என்றார்.
மேலும், “மு.க.ஸ்டாலின் திமுகவுக்கு வாக்குச் செலுத்ததாதவர்களுக்குமான ஆட்சி நடத்துகிறார். இலவச பேருந்துகளில் பெண்கள் பாரபட்சம் இன்றி பயணிக்கின்றனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. காரை துரத்தும் நாயைப் போல, குறை சொல்லும் நாயால் காரை பிடிக்கவே முடியாது. அதுபோல திமுக அரசுக்கு எதிராக பொய்களைச் சொல்லி குறை கூறிக்கொண்டிருந்தாலும், அதன் நல்லாட்சியை தடுக்க முடியாது.
கள்ளச்சாராய பிரச்சினையை பெரிதாக பேசும் கட்சிகள், உத்தரபிரதேசத்தில் சாமியார் கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் மரணம் அடைந்த சம்பவத்தை கண்டிக்காமல் விட்டுள்ளன. கள்ளச்சாராய வழக்கில் உரியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பாதிக்காமல் உடன் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர்.” என்றார்.
லியோனி பேசிக்கொண்டிந்தபோது, தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை சக தொண்டர்கள் முதலுதவி கொடுத்து அனுப்பி வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தை வேலு உள்ளிட்ட திமுக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதே போல் வாடிப்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன், மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.